• இறைவனின் படைப்பில் நாம் காணும் ஜீவராசிகள் ஒவ்வொன்றிலும் சாதாரண மனிதர்கள் கற்றுக் கொள்வதற்கு தேவையான தனித்தன்மைகள் குணாதிசயங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனாலும் பாலூட்டி வளர்க்கும் அன்னை போல் நடைபயிற்றுவிக்கும் தந்தை போல் ஒரு மனிதனின் நிறைவான வாழ்க்கைப் பயணத்தை நிர்ணயித்து, நெறிப்படுத்தி, வழிநடத்துபவரை குரு என்கிறோம்.
• 2000 ஆண்டின் தொடக்கத்தில் சம்ஸ்கிருத பாரதியின் சம்பாஷண சிபிரம் (பத்துநாள் பேச்சுப் பயிற்சி வகுப்பு) மூலமாக திரு. கோபால்ராம் என்பவரே எனது சமஸ்கிருதக் கல்வியின் பிள்ளையார் சுழி. பின்னாளில் சம்ஸ்கிருத பாரதியின் பொறுப்பிலிருந்த முனைவர் திரு. பத்மகுமார் முதலான பலரும் எனது சம்ஸ்கிருதப் பயணத்தின் மாபெரும் உந்து சக்திகள்.
• 2002 ஜனவரியில் சம்ஸ்கிருத பரப்புனராக திருச்சிராப்பள்ளிக்கு அறிமுகமான நாளில் இருந்து எனது நகர்வின் ஒவ்வொரு அங்குலத்தையும் வணக்கத்திற்குரிய திரு.T.S.ரங்கராஜன் அவர்களே குரு ஸ்தானத்தில் இருந்து வழிநடத்தினார்.
• திருச்சி ஸ்ரீரங்கத்தில் 1959ல் திரு சிவராமகிருஷ்ண ஐயர் - சாரதா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பு , செயின்ட் ஜோசப் கல்லூரியில் B.Sc. Maths முடித்த பிறகு ஓராண்டு சென்னையில் தபால் துறையில் பணியாற்றினார். பிறகு திருச்சி மாவட்டம் புலிவலம் கிராமத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியமரத்தப்பட்டார். பள்ளிப்படிப்பின் போது தனியாக அமரகோஸம் தொடங்கி முறையாக சம்ஸ்கிருதம் பயின்றார். மணி சாஸ்திரிகள் என்கிற பாலசுப்பிரமணிய கணபாடிகளிடம் முறையாக வேதம் பயின்றார். சிருங்கேரி சாரதாபீட மஹாசன்னிதானத்தின் அருட்கிருபையினால் ஸ்ரீரங்கம் சிருங்கேரி மட்டத்தின் பாடசாலை மற்றும் அலுவலகப் பணிகளையும் திறம்பட கவனித்து வந்தார். ஸ்ரீரங்கம் சிருங்கேரி மட்டத்தின் தர்மாதிகாரியாகப் பொறுப்பேற்று இருந்த திரு ராமநரசு அவர்கள் 2008ல் காலமனார். அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் கட்டளைப்படி மடத்தின் தர்மாதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். 2017 ஜனவரியில் நடைபெற்ற ஆதிசங்கர ஸ்தோத்திர பாராயணம் மகா யக்ஞத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளராக வெற்றிகரமாக தொண்டாற்றினார். அத்வைத சாரதா திட்டத்தின் மூலம் சங்கர பாஷயத்தின் மறுபதிப்பிற்கு உண்டான கைங்கரியத்தை இறுதிவரை சிரமேற்கொண்டார்.
• 1999ல் இருந்து சம்ஸ்கிருத பாரதியின் கார்யகர்த்தராக திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சம்ஸ்கிருத பேச்சுப் பயிற்சி முகாம்களை நடத்துதல் , அஞ்சல் வழியில் சம்ஸ்கிருதம் பயில்வோருக்கு வழிகாட்டு வகுப்புகளை நடத்துதல் , உடன் தொண்டாற்றும் சம்ஸ்கிருத பாரதியின் கார்யகர்த்தர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்தல் மற்றும் போதனை என இறுதிவரை சமஸ்கிருத தொண்டாற்றினார்.
• ஸ்ரீரங்கம் சிருங்கேரி மடத்தின் தர்மாதிகாரி , சம்ஸ்கிருத பாரதியின் கார்யகர்த்தராக , தன்னை நாடி வருவோருக்கு ஆன்மீக குருவாக , வங்கிப் பணியில் இருந்த போது மட்டுமின்றி விருப்ப ஓய்வுக்குப் பிறகும் புலிவலம் கிராமத்தின் பொருளாதாரம் உள்ளிட்ட அளவற்றையும் கட்டமைத்த நலன்விரும்பியாக , ஸ்ரீரங்கத்தின் ஆன்மீகத்தை மேம்படுத்தும் பக்தர்களின் ஒருங்கிணைப்பாளராக, பல்வேறு சமுதாயத் தலைவர்களை ஒருங்கிணைக்கும் வல்லமை பெற்றவராக, ஆகச் சிறந்த சமூக சேவகராக என பன்முகத்தன்மையுடன் வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றினார்.
• கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாத்திட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். பின்னர் அதே பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு 29.08.2020 அன்று இறை நிலையோடு இரண்டறக் கலந்தார்.
• சம்ஸ்கிருதம் பயிலும் எண்ணத்துடன் , அது பாலபாடமாக இருந்தாலும் சரி , காவியம் மற்றும் இலக்கணம் ஆனாலும் எந்த நேரத்திலும் இவரை அணுகலாம் , அழைக்கலாம் என்று இருந்த ஆயிரக்கணக்கான இவரது சீடர்களில் நானும் ஒருவன் என்பது வாழ்வில் நான் பெற்ற பேறு.